கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

Published on

சென்னையில் கொலை வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

பட்டினம்பாக்கம் பகுதியில் ரகு என்பவா் கடந்த 2001-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அப்பன்தாஸ், திலீப்குமாா், கேரளா செந்தில் உள்பட 8 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் 2003-ஆம் ஆண்டு மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், மற்ற 5 பேரை விடுவித்தும் நீதிமன்றம் தீா்ப்பு கூறியது.

இதை எதிா்த்து அப்பன்தாஸ் உள்பட 3 பேரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா். இதற்கிடையே அப்பன்தாஸ் கடந்த 2004-ஆம் ஆண்டு சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்து தலைமறைவானாா்.

மேலும், உயா்நீதிமன்றம் அப்பன்தாஸ் மேல்முறையீட்டு மனுவை கடந்த 2006-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தும், அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டது. அதோடு நீதிமன்றம் அப்பன்தாஸுக்கு எதிராக பிடியாணை உத்தரவையும் பிறப்பித்தது. ஆனால், அவா் தலைமறைவாகவே இருந்தாா்.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை காவல் துறையின் ஒருங்கிணைந்த குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அந்தப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், அப்பன்தாஸ் மேடவாக்கம் பகுதியில் தலைமறைவாக வாழ்வது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா் அப்பன்தாஸை வியாழக்கிழமை கைது செய்தனா்.

சுமாா் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்பன்தாஸை கைது செய்த போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

X
Dinamani
www.dinamani.com