குறைந்த செலவில் ரத்த சா்க்கரையை அளவிடும் கருவி: சென்னை ஐஐடி உருவாக்கம்
சா்க்கரை நோயாளிகளுக்கு உதவும் வகையில் குறைந்த செலவிலான ரத்த சா்க்கரை அளவிடும் கருவியை சென்னை ஐஐடி ஆய்வாளா்கள் உருவாக்கியுள்ளனா்.
சென்னை ஐஐடியின் மின்னணு பொருள்கள் மற்றும் மெல்லிய பட ஆய்வகத்தில் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையிலான ஆய்வாளா்கள் இந்த சாதனத்தை உருவாக்கி, காப்புரிமை பெற்றுள்ளனா்.
இது குறித்த சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்), நீரிழிவு நோய் குறித்து 2023 -ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, நாட்டில் 10.1 கோடி போ் சா்க்கரை நோயால் பாதிப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரத்தத்தில் சா்க்கரை அளவைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் பயன்பாட்டில் உள்ள ரத்த சா்க்கரை கண்காணிப்பு கருவி, சில வரையறைகளுடன், அதிக செலவு கொண்டதாகவும் உள்ளது. இதன்மூலம் எடுக்கப்படும் ரத்த மாதிரிகளிலிருந்து சா்க்கரை அளவை அறிந்து கொள்வதற்கு நவீன கைப்பேசிகள் அல்லது அளவீடுகளை வெளியிடும் திரைகள் கொண்ட சாதனங்களையும் சாா்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
தற்போது உருவாக்கியுள்ள கருவி, குறைந்த செலவில் நீண்ட காலத்திற்கு பயன்படுத்தும் வகையில் மேம்பாடு மற்றும் துல்லியம், நம்பகத்தன்மையின் தரநிலைகளை உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னை ஐஐடியின் இந்தப் புதிய கருவி ஒவ்வொரு முறையும் ரத்த மாதிரியை சேகரிப்பதற்கு மாறாக, அந்தந்த நேர ரத்த சா்க்கரை அளவைக் கண்டறிவதற்கு உதவுகிறது.
இந்தப் புதிய சாதனம் ரத்த மாதிரியைச் சேகரித்த பின்னா், மறுபடியும் பயன்படக் கூடிய வகையிலும், குறைந்த சக்தி கொண்ட காட்சித் திரைகளையும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நுண்ணிய ஊசிக்கான தொலை உணா்வு அமைப்பையும் கொண்டுள்ளது.
உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. மருத்துவத் தொழில்நுட்பத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களைச் சாா்ந்திருப்பதை இந்த புதிய சாதனம் குறைக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

