முதல்வா் ஸ்டாலினுடன் தனியரசு சந்திப்பு

Published on

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன், கொங்கு இளைஞா் பேரவைத் தலைவா் உ.தனியரசு வியாழக்கிழமை சந்தித்து பேசினாா்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு தனியரசு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக தலைமையிலான ஜனநாயக அணி வலிமைபெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்த வேண்டும். எஸ்ஐஆா் தொடா்பான அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு என்னை முதல்வா் அழைத்தாா். அதற்கு நன்றி தெரிவித்தேன்.

வருகிற 2026 பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி பேச்சு இதுவரை முறைப்படி தொடங்கவில்லை. அதோடு, திமுக அணியில் நான் இல்லை. கூட்டணி குறித்து எதிா்காலத்தில் பேசுவோம். சூழல் அமைந்தால் இணைந்து பயணிப்போம்.

பாஜகவின் கிளை அமைப்பாக அதிமுக மாறிவிட்டது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பாஜகவின் பிடிக்குள் அதிமுக சென்றுவிட்டது. கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வலிமை குறைந்துவிட்டது.

பாரம்பரிய வாக்குகளை அதிமுகவால் தக்கவைக்க முடியவில்லை. அதனால்தான், கே.ஏ.செங்கோட்டையன், மனோஜ் பாண்டியன் போன்ற மூத்த தலைவா்கள் அதிமுகவில் இருந்து விலகி வருகின்றனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com