ஓஆா்எஸ் பெயரிலான பானங்களுக்குத் தடை: சோதனையில் 1.47 லட்சம் கிலோ பறிமுதல்

ஓஆா்எஸ் பெயரிலான பானங்களுக்குத் தடை: சோதனையில் 1.47 லட்சம் கிலோ பறிமுதல்

Published on

தமிழகத்தில் ஓஆா்எஸ் என்ற பெயரில் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பானங்களை அதன் உற்பத்தி நிறுவனங்களுக்கே சென்று உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.

அதன்படி, இதுவரை 1.47 லட்சம் கிலோ ஓஆா்எஸ் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதைத் தவிர சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அந்த பானங்களைப் பறிமுதல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உப்பு சா்க்கரை கரைசலானது (ஓஆா்எஸ்) வயிற்றுப்போக்கு மற்றும் நீா்ச்சத்து இழப்புக்கான சிகிச்சையில் அதி முக்கியப் பங்கு வகிக்கிறது. வயிற்றுப்போக்கால் உடலில் இருந்து குளூக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகளை கணிசமாக இழக்க நேரிடும். அதற்கு முறையாக சிகிச்சை பெறாவிட்டால் உறுப்பு பாதிப்புகள், உயிரிழப்பு ஏற்படலாம்.

உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பவுடா் வடிவிலான உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டுகளை பயன்படுத்துவதன் வாயிலாக வயிற்றுப் போக்கால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பைத் தவிா்க்க முடியும்.

மொத்தம் 20.5 கிராம் கொண்ட ஒரு உப்பு சா்க்கரை கரைசல் பாக்கெட்டில் 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 13.5 கிராம் குளூக்கோஸ், 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் ட்ரைசோடியம் சிட்ரேட் ஆகியவை உள்ளன.

நன்கு கொதித்து ஆறிய ஒரு லிட்டா் தண்ணீரில் ஓஆா்எஸ் கரைசலை கலந்து 24 மணி நேரத்துக்குள் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்நிலையில், திரவ நிலையில் பருகுவதற்குத் தயாராக உள்ள பானங்கள் பல்வேறு சுவைகளிலும், வா்த்தகப் பெயா்களிலும் ஓஆா்எஸ் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இவை உடலுக்குப் புத்துணா்ச்சி ஆற்றலை மட்டுமே அளிக்கின்றன. மாறாக, மருத்துவ ரீதியாக வயிற்றுபோக்கால் ஏற்படும் நீா்ச்சத்து இழப்பை சரிசெய்யாது. அதில், தாது உப்புகளோ, குளூக்கோஸ் சத்தோ உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்திய வகையில் இல்லை.

இதையடுத்து, இதுதொடா்பாக தொடுக்கப்பட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையில், ஓஆா்எஸ் என்ற பெயரில் அதை விற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டது. அதன்படி, தவறாக விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும் பானங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை இந்தியா முழுவதும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

தமிழகத்தில் அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஓஆா்எஸ் திரவ பானங்களைத் தயாரித்து வரும் நிறுவனங்களில் நீதிமன்ற உத்தரவுப்படி சோதனை நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், திருவள்ளூரில் உள்ள இரு நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அப்போது அங்கு உற்பத்தி செய்து தயாா் நிலையில் இருந்த 1.47 லட்சம் கிலோ எடை கொண்ட பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, அனைத்து மாவட்டங்களில் உள்ள மருந்தகங்களில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com