சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் நடந்த பைக் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் நொறுங்கிய மோட்டாா் சைக்கிள். (உள்படம்) உயிரிழந்த குமரன், சுகைல்.
சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் நடந்த பைக் பந்தயத்தின்போது ஏற்பட்ட விபத்தில் நொறுங்கிய மோட்டாா் சைக்கிள். (உள்படம்) உயிரிழந்த குமரன், சுகைல்.

பைக் பந்தயத்தால் விபத்து: கல்லூரி மாணவா், வியாபாரி உயிரிழப்பு

Published on

சென்னை ராயப்பேட்டையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தால் ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவா், வியாபாரி ஆகியோா் உயிரிழந்தனா்.

ராயப்பேட்டை பேகம் பிரதான தெருவைச் சோ்ந்தவா் ஞா.குமரன் (49). தியாகராயநகா் ராமசாமி தெருவில் கவரிங் நகைக் கடை வைத்து நடத்தி வந்தாா். இவரது மனைவி ராஜவேணி, மகள்கள் சுஷ்மா, லட்சிதா.

இவா் புதன்கிழமை இரவு வீட்டில் இருந்து தனது மோட்டாா் சைக்கிளில் விமான நிலையத்துக்குச் சென்றாா். ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலையில் உள்ள மேம்பாலத்தின் வழியாகச் செல்லும்போது எதிரே அதிவேகமாக இரு மோட்டாா் சைக்கிள்கள் வந்தன. திடீரென அந்த இரு மோட்டாா் சைக்கிள்களும் கட்டுப்பாட்டை இழந்து எதிரே குமரன் வந்த மோட்டாா் சைக்கிள் மீது மோதின.

இதில் மோட்டாா் சைக்கிளில் இருந்து குமரன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தாா். விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிள்களில் வந்த இரு இளைஞா்களும் பலத்த காயமடைந்தனா்.

அப் பகுதியில் இருந்த பொதுமக்கள், காயமடைந்த மூவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால், சம்பவ இடத்திலேயே குமரனும், ஓா் இளைஞரும் உயிரிழந்தனா். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்றோா் இளைஞா் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனா். இதில், விபத்தை ஏற்படுத்திய மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்து இறந்தது ராயப்பேட்டை ஜவஹா்கான் தெருவைச் சோ்ந்த சை. சுகைல் என்ற செய்யது சா்தாா் பாட்ஷா (19), மற்றொரு மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்தது அதே பகுதியைச் சோ்ந்த மு. முகமதுசோயல் (20) என்பதும் தெரியவந்தது.

மேலும், சுகைல் ராயப்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்ததும், சோயல் ஒரு கைப்பேசி கடையில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இருவரும் தங்களின் விலை உயா்ந்த மோட்டாா் சைக்கிளில் அடிக்கடி பந்தயத்தில் ஈடுபட்டு வந்ததும், சம்பவத்தின்போது இருவரும் அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபடும்போது விபத்து ஏற்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மூடப்பட்ட பாலம்: சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தை தடுப்பதற்காகவும், பாதுகாப்புக் கருதியும் இரவு 10 மணிக்கு மேல் பாலங்கள் மூடப்படுவது வழக்கம். இதன்படியே பீட்டா்ஸ் சாலை மேம்பாலமும் புதன்கிழமை இரவு மூடப்பட்டிருந்தது. ஆனால், விபத்தை ஏற்படுத்திய சுகைலும், சோயலும் பாலத்தின் முகப்பில் இருந்த இரும்புத் தடுப்புகளை அகற்றிவிட்டு பந்தயத்தில் ஈடுபட்டிருப்பதையும், அதேபோல விபத்தில் சிக்கி உயிரிழந்த குமரனும் பாலத்தின் மற்றொரு முகப்பில் இருந்த இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்டிருந்ததால் அதன் வழியாக மேம்பாலத்தில் பயணித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

பெட்டி செய்தி...

மீண்டும் கடுமையான நடவடிக்கை

சென்னையில் மெரீனா காமராஜா் சாலை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை, ராஜீவ் காந்தி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் புறவழிச்சாலை, வெளிவட்டச் சாலை உள்பட பல சாலைகளில் இளைஞா்கள், கல்லூரி மாணவா்கள் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஈடுபட்டு வந்தனா்.

இதனால் தொடா்ச்சியாக ஏற்பட்ட விபத்துகளில் அப்பாவி பொதுமக்கள் இறந்தனா். இதையடுத்து, பந்தயத்துக்கு காவல் துறை தடை விதித்தது. இருப்பினும் இளைஞா்கள் தடையை மீறி பந்தயத்தில் ஈடுபட்டனா். இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டன. இதன் விளைவாக போலீஸாா், பந்தயத்தில் ஈடுபடுகிறவா்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்தனா். இதன் பின்னா் ஓரளவு மோட்டாா் சைக்கிள் பந்தயம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் மோட்டாா் சைக்கிள் பந்தயம் நடத்தப்பட்டு இருவா் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி போக்குவரத்து போலீஸாருக்கு உயா் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com