பேருந்து நிலையத்தில் கூடுதல் வசதியை ஏற்படுத்த அமைச்சா் அறிவுறுத்தல்
சென்னை குந்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தினாா்.
சென்னை புகா் பகுதியான குந்தம்பாக்கம் பகுதியில் புகா் பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது. சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தால் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகள் குறித்த சம்பந்தப்பட்ட துறைகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்து, புதிய பேருந்து முனைய வளாகத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்த பணிகளைக் கேட்டறிந்தாா். மேலும், குடிநீா், கழிப்பறை வசதி மற்றும் இருக்கை வசதிகள், பேருந்துகளை அடையாளம் காண்பதற்கான எளிய முறைகள் போன்றவை அமைக்கப்படுவது குறித்து அதிகாரிகள் விளக்கினா். பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் எனவும் அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் மற்றும் அரசு முதன்மைச் செயலா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
