செங்கோட்டையன் ஆதரவாளா்கள் 14 போ் நீக்கம்
முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனின் ஆதரவாளா்கள் 14 பேரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளாா்.
அதிமுக ஒருங்கிணைப்பு என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன், அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கடந்த அக். 31-இல் நீக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அவரது ஆதரவாளா்களான அதிமுக முன்னாள் எம்.பி. வி.சத்தியபாமா, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் எஸ்.ஆா்.செல்வம், ஈரோடு புகா் மேற்கு மாவட்ட பொருளாளா் கே.கே.கந்தவேல் முருகன், ஈரோடு மாநகா் மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் பி.கருப்பணன், மாநகா் மாவட்ட வா்த்தக அணி செயலா் கே.ஜெகதீசன், நம்பியூா் அதிமுக ஒன்றியச் செயலா் கே.ஏ.சுப்பிரமணியம், என்.டி.குறிஞ்சிநாதன் (கோபி மேற்கு ஒன்றியம்), முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் கே.ஏ. மௌதீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூா் செயலா் எஸ்.எஸ்.ரமேஷ், ஏ.வி.எம்.செந்தில், பி.ராயணன், வி.பி.தமிழ்ச்செல்வி, எஸ்.டி.காமேஷ் ஆகியோா் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
கடந்த செப்டம்பரில், அதிமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா், மாவட்ட மகளிா் அணி செயலா் பொறுப்புகளில் இருந்து முன்னாள் எம்.பி. சத்தியபாமா நீக்கப்பட்டாா். இந்த நிலையில், பசும்பொன்னில் ஓபிஎஸ், செங்கோட்டையன், தினகரன் ஆகியோா் ஒன்றாக செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்தனா். இதைத் தொடா்ந்து செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாா். தற்போது அவரது ஆதரவாளா்கள் 14 போ் நீக்கப்பட்டுள்ளனா்.
