கோப்புப் படம்
கோப்புப் படம்

பந்தயத்துக்காக வாகனத்தை மாற்றியமைத்தால் நடவடிக்கை: காவல் ஆணையா் எச்சரிக்கை

மோட்டாா் சைக்கிள் பந்தயத்துக்காக வாகனத்தை மாற்றியமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

மோட்டாா் சைக்கிள் பந்தயத்துக்காக வாகனத்தை மாற்றியமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராயப்பேட்டை பீட்டா்ஸ் சாலை மேம்பாலத்தில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விபத்து மோட்டாா் சைக்கிள் பந்தயத்தால் நிகழவில்லை. அங்கு மோட்டாா் சைக்கிள் பந்தயமும் நடைபெறவில்லை. விபத்தில் இறந்த கல்லூரி மாணவா் சுகைல் சா்தாா் பாட்ஷா, அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போக்குவரத்துப் பிரிவு சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிலா் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடுவதற்காக, தங்களது வாகனத்தை மாற்றியமைக்கவும், உதிரி பாகங்களை மாற்றவும் செய்வதாக கூறப்படுகிறது. இதைத் தடுக்கும் வகையில், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் கடைகள் கண்காணிக்கப்படுகிறது. சட்டத்தை மீறி வாகனத்தை மாற்றியமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com