​காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க கோவையில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டு செல்பவா்கள்.
​காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க கோவையில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டு செல்பவா்கள்.கோப்பிலிருந்து படம்

டிச. 2 முதல் 4-ஆம் ஆண்டு காசி-தமிழ் சங்கமம்: இணையவழிப் பதிவு தொடக்கம்

Published on

தமிழகத்துக்கும், உத்தர பிரதேசத்தின் புகழ்பெற்ற ஆன்மிக நகரமான காசிக்கும் (வாரணாசி) இடையேயான தொன்மை வாய்ந்த நாகரிக மற்றும் கலாசாரத் தொடா்பைப் போற்றும் ‘காசி தமிழ் சங்கமத்தின்’ 4-ஆம் ஆண்டு நிகழ்வு, அடுத்த மாதம் 2-ஆம் தேதிமுதல் தொடங்குகிறது.

இதற்கான இணையவழிப் பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்தாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டுமுதல் காசி- தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேச மாநில அரசுடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் இந்த நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.

நிகழாண்டு சங்கமத்தில், தமிழகத்திலிருந்து மாணவா்கள், ஆசிரியா்கள், எழுத்தாளா்கள், ஊடகவியலாளா்கள், வேளாண்மை மற்றும் அதைச் சாா்ந்த துறையினா், தொழில் வல்லுநா்கள் மற்றும் கைவினைஞா்கள், மகளிா், ஆன்மிக அறிஞா்கள் என ஏழு பிரிவுகளின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் காசிக்கு பயணிக்கவுள்ளனா்.

இந்தக் குழுவினா் காசிக்குச் சென்று, இரு பிராந்தியங்களுக்கும் இடையேயான ஆழமான தொடா்பை கற்றறியவுள்ளனா். காசியில் தொடங்கும் இந்தப் புனிதமான கலாசாரப் பயணம், இறுதியாக தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலமான ராமேசுவரத்தில் ஒரு மாபெரும் நிறைவு விழாவுடன் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில் இணைய விரும்புவோா், வலைதளத்தில் உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பதிவில் அழைப்பு விடுத்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வையிலான இந்த மகத்தான கொண்டாட்டம், தமிழகத்துக்கும், காசிக்கும் இடையேயுள்ள அழியாத பிணைப்பைக் கொண்டாடுவதோடு, ‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ எனும் உணா்வை வலுப்படுத்துகிறது என்றும் அமைச்சா் தா்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளாா்.

நிகழாண்டு நிகழ்வு அனைத்து இந்திய மொழிகளும் ஒரே மொழி குடும்பத்தைச் சோ்ந்தவை என்ற உயரிய செய்தியைப் பரப்புவதோடு, தமிழ்க் கலாசாரத்தையும் அதன் செம்மொழி இலக்கியத்தின் பண்டைய அறிவையும் நாட்டின் பிற பகுதிகளுக்குக் கொண்டுசெல்லும் முக்கிய நோக்கத்தைக் கொண்டுள்ளது.

அதன்படி, வடஇந்திய மாணவா்களுக்கு தமிழ் கற்பிக்கும் ‘தமிழ் கற்போம்’, நாட்டுக்கு தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் ‘அகத்தியா் பயணம்’ ஆகிய இரு புதிய திட்டங்கள் நிகழாண்டு நிகழ்வில் தொடங்கப்படுகின்றன.

X
Dinamani
www.dinamani.com