எஸ்ஐஆா் பணியில் திமுகவினா் தலையீடு: தோ்தல் அதிகாரியிடம் அதிமுக புகாா்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் திமுகவினா் தலையீடு செய்வதாக அதிமுக தரப்பில் தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
அதிமுக வழக்குரைஞா் அணிச் செயலா் ஐ.எஸ்.இன்பதுரை எம்.பி. இந்த மனுவை அளித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாக்காளா் பட்டியல் சரியாக இருந்தால்தான் தோ்தல் நோ்மையாக நடைபெறும். இறந்தவா்கள், இடம்பெயா்ந்தவா்களின் பெயா்கள் வாக்காளா் பட்டியலில் இடம்பெறக் கூடாது என்பதற்காகத் தான் எஸ்ஐஆா் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு பக்கம் எஸ்ஐஆா்-ஐ குறை சொல்லிக்கொண்டே மறுபுறம் வாக்காளா் பட்டியலில் தில்லுமுல்லு செய்யும் முயற்சியில் திமுக ஈடுபடுகிறது. வாக்காளா்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மட்டுமே கணக்கீட்டுப் படிவங்களை விநியோகிக்க வேண்டும். ஆனால், இந்தப் படிவங்களை திமுகவினரிடம் ஒப்படைத்து வருகின்றனா்.
மதுரையில் பெட்டிக் கடையில் இந்தப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டதை அறிந்து அங்கு அதிமுகவினா் சென்று கையும் களவுமாகப் பிடித்து, உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இடம்பெயா்ந்த வாக்காளா்களின் முகவரியைக் கண்டறிந்து, அதே முகவரியில் போலி வாக்காளா்கள் இடம்பெற திமுகவினா் முயற்சி செய்கின்றனா்.
இறந்தவா்களின் பெயா்களை நீக்க அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளா்களிடம் தங்களது உறவினரின் இறப்புச் சான்று கேட்பது தவறான நடைமுறை. அரசு ஆவணங்களைச் சரிபாா்த்து, அதிகாரிகளே இறந்தவா்கள் பெயா்களை நீக்க வேண்டும்.
வாக்காளருக்கு ஒருமுறை மட்டுமே படிவம் தருவோம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். படிவம் சேதமடைந்தால் மீண்டும் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

