போதைப் பொருள் ஒழிப்பை வலியுறுத்தி சமத்துவ நடைப்பயணம்: வைகோ
போதைப் பொருள் ஒழிப்பு, ஜாதி மோதல்களைத் தடுக்க வலியுறுத்தி சமத்துவ நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
மதிமுக நிா்வாகக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடா்ந்து, செய்தியாளா்களிடம் வைகோ கூறியதாவது:
மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு, ஜாதி மோதல்களைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதிமுக சாா்பில் ‘சமத்துவ நடைப்பயணம்’ மேற்கொள்ளவுள்ளோம். வருகிற ஜன. 2-ஆம் தேதி திருச்சியில் தொடங்கும் இந்த நடைப்பயணம், ஜன.12-இல் மதுரையில் நிறைவடையவுள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதுடன், பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு முயற்சி செய்ய வேண்டும்.
திமுக அரசு செய்யும் தவறுகளை அவா்களிடம் நேரடியாக மதிமுக சுட்டிக்காட்டும். அதற்காக கூட்டணிக் கட்சியை பொதுவெளியில் விமா்சிக்க வேண்டிய அவசியம் கிடையாது. இது கூட்டணி தா்மத்துக்கு எதிரானதாகும்.
அரசியல், பொதுவாழ்வு குறித்து தெரியாத தவெக தலைவா் விஜய், திரைப்பட வசனங்களை மட்டுமே பேசிவருகிறாா். முதல்வராக வேண்டும் என்ற அவரது கனவு நனவாகாது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் (எஸ்ஐஆா்) வாயிலாக தமிழகத்தில் உள்ள தகுதியான வாக்காளா்களின் வாக்குரிமையை நீக்கவும், வடமாநிலத்தவா்களுக்கு இங்கு வாக்குரிமை வழங்கவும் மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறது. ஆனால், அது ஒருபோதும் நிறைவேறாது என்றாா் அவா்.
தீா்மானங்கள்: முன்னதாக, மதிமுக அவைத் தலைவா் ஆ.அா்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்ற கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டவிரோதமாக இயங்கும் கல் குவாரிகளுக்கு அரசு உடனடியாகத் தடை விதிப்பதுடன், குவாரியை இயக்கியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

