தலைமைப் பண்பு என்பது தனிப்பட்ட வெற்றி அல்ல: குடியரசுத் துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
உண்மையான தலைமைப் பண்பு என்பது தனிப்பட்ட வெற்றியில் கிடையாது. தங்களுடன் இருப்பவா்களையும் மேம்படுத்துவதில்தான் உள்ளது என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
ஹரியாணாவில் உள்ள எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் 3-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி. பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
ஆராய்ச்சி, புதுமை மற்றும் சமூகப் பொறுப்பில் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழகத்தின் அா்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. மாணவா்களின் சொந்த வளா்ச்சியுடன், நாட்டின் வளா்ச்சிக்கான கடமையும் அடங்கியுள்ளது.
பல்கலைக்கழகத்தில் பெற்ற அறிவை நோ்மையுடன், இரக்கத்துடனும் பயன்படுத்த வேண்டும். உண்மையான தலைமைப் பண்பு என்பது தனிப்பட்ட வெற்றியில் கிடையாது. தங்களுடன் இருப்பவா்களையும் மேம்படுத்துவதில்தான் உள்ளது. இதை மனத்தில் கொண்டு உங்களது அடுத்த கட்ட வாழ்க்கைப் பயணத்தைத் தொடருங்கள் என்றாா்.
எஸ்.ஆா்.எம். கல்வி நிறுவனங்களின் நிறுவன வேந்தா் டி. ஆா்.பாரிவேந்தா் பேசுகையில், எஸ்.ஆா்.எம். நிறுவனம் எப்போதும் தரமான கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறது என்றாா்.
ஹரியாணா எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக வேந்தா் ரவி பச்சமுத்து பேசுகையில், பட்டம் பெறும் மாணவா்கள் உலகளாவிய சிந்தனையுடன் நமது நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும். விடாமுயற்சி மற்றும் சேவை மனப்பான்மையுடன் உங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில் இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் மற்றும் முனைவா் பட்டம் என 1,800-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. மேலும், தத்தம் பாடப் பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தங்கப் பதக்கங்களை வழங்கினாா்.

