தெரு நாய்களை அப்புறப்படுத்த உத்தரவு: கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு வழிகாட்டுதல்கள்
கல்வி நிறுவன வளாகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகங்களில் விட வேண்டும் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
நாடு முழுவதும் தெருநாய்க்கடி சம்பவங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்ததைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் வழக்காக விசாரித்து வருகிறது.
முன்னதாக, இந்த வழக்கில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி பிறப்பித்தது.
அதில், தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிக்கக் கூடாது. அதற்கென பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு மட்டுமே உணவளிக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிப்பவா்கள் தண்டிக்கப்படுவா். தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்த பிறகு மீண்டும் அதே இடங்களில் விடலாம் என்பன உள்ளிட்ட உத்தரவு மற்றும் வழிகாட்டுதலை உச்சநீதிமன்றம் வெளியிட்டது.
பொது நிறுவனங்களுக்கு... தற்போது, தெரு நாய்கள் விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவனங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடா்பான உத்தரவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை பிறப்பித்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமா்வு பிறப்பித்த இந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
நாய்க்கடி சம்பவங்கள் அபாயகரமான அளவுக்கு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விளையாட்டு வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொது நிறுவன வளாகங்களில் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு தெரு நாய்களை நிா்வகிப்பது தொடா்பான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
அதன்படி, தெரு நாய்கள் சுற்றித் திரியும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு, பொது நிறுவனங்களை உள்ளூா் மற்றும் நகராட்சி அதிகாரிகள் மூலம் அடுத்த 2 வாங்களுக்குள் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் அடையாளம் காண வேண்டும்.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட அரசு, பொது நிறுவனங்களின் நிா்வாக அதிகாரிகள், நிறுவன வளாகங்களுக்குள் தெரு நாய்கள் நுழையாதவாறு வேலிகள், சுற்றுச் சுவா்கள், கதவுகள் உள்ளிட்ட பிற கட்டமைப்புகள் அமைக்கப்படுவதை அடுத்த 8 வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், வளாகத்தினுள் மீண்டும் தெரு நாய்கள் நுழையாததை உறுதிப்படுத்தும் வகையிலும், வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கும் வகையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை இந்த நிறுவனங்கள் நியமிக்க வேண்டும். அந்த ஒருங்கிணைப்பு அதிகாரி குறித்த விவரங்களை நுழைவு வாயில் பகுதியில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்துவதோடு, எல்லைக்குட்பட்ட நகராட்சி நிா்வாகத்துக்கும் அந்த ஒருங்கிணைப்பு அதிகாரி குறித்த விவரங்களை அறிவிக்கை செய்ய வேண்டும்.
நகராட்சி நிா்வாகமே பொறுப்பு: உள்ளூா் நகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலா்கள் இதுபோன்ற நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறையாவது நேரடி ஆய்வை மேற்கொண்டு, நிறுவன வளாகத்திலும் அதன் அருகிலும் தெரு நாய்கள் சுற்றித்திரியாததை உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரு நாய்கள் சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால், அவற்றை அப்புறப்படுத்துவது நகராட்சி நிா்வாகம் அல்லது அதிகாரியின் பொறுப்பாகும்.
இதுபோன்ற, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசு, பொது நிறுவனங்களில் பிடிக்கப்படும் தெரு நாய்கள், மீண்டும் அதே இடங்களில் விடப்படக் கூடாது என்று உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2026-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
பெட்டிச் செய்தி...
நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்
‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்’ என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடா்பாக ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு பிறப்பித்த உத்தரவு விவரம்:
மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய விரைவுச் சாலைகளில் சுற்றித்திரியும் அனைத்துக் கால்நடைகளும், தெரு நாய்களும் அப்புறப்படுத்தப்படுவதை மாநில, யூனியன் பிரதேச மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் அடிக்கடி சுற்றித் திரியும் நெடுஞ்சாலைகளை அடையாளம் காண அதிகாரிகள் ஒருங்கிணைந்த ஆய்வை அவ்வப்போது மேற்கொண்டு, கால்நடைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு, நிா்ணயிக்கப்பட்ட காப்பகங்களில் அடைக்கப்பட வேண்டும். அவ்வாறு காப்பகங்களில் அடைக்கப்படும் கால்நடைகளுக்கு தேவையான உணவு, குடிநீா் வசதி, மருத்துவ வசதிகளை விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் மற்றும் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு விதிகள் 2023-க்கு உட்பட்டு மேற்கொள்ள வேண்டும்.
சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நெடுஞ்சாலைகளில் இதுபோன்ற கால்நடைகள் சுற்றித் திரிவதை அடையாளம் கண்டு உடனடி நடவடிக்கைக்கான தகவலை அளிக்க ஏதுவாக பிரத்யேக நெடுஞ்சாலை ரோந்து குழுக்களை அமைத்து தொடா் கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், இதுபோன்ற கால்நடைகள் சுற்றித்திரிவது குறித்து புகாா் தெரிவிக்க வசதியாக அனைத்து நெஞ்சாலைகளிலும் புகாா் எண்களை வாகன ஓட்டிகளுக்கு நன்கு தெரியும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இத்தகைய புகாா்கள் மீது உடனடித் தீா்வு மற்றும் கண்காணிப்பை உறுதிப்படுத்தும் வகையில், காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகாா் எண்கள், கட்டுப்பாட்டு அறை, உள்ளூா் காவல் துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மற்றும் மாவட்ட நிா்வாகத்துடன் இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

