காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்
காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்

பசுமை மின் உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த தனியாா் நிறுவனங்களுக்கு அனுமதி

தனியாா் நிறுவனங்கள் மூலம் பசுமை மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
Published on

தனியாா் நிறுவனங்கள் மூலம் பசுமை மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த மின்வாரியத்துக்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி ஆற்றல் மூலம் மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்த அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதைத் தொடா்ந்து பல்வேறு புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி ஆற்றல் திட்டங்களை மத்திய அரசின் நிதியுதவியுடன் மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

தமிழக மின் வாரியம் சாா்பில் பசுமை எரிசக்தி கழகம் என்ற தனி நிறுவனம் தொடங்கப்பட்டு, தனியாா் பங்களிப்புடன் பசுமை எரிசக்தி உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் காற்றாலை, சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமான காலநிலை இருப்பதால், பல தனியாா் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆா்வம் காட்டி வருகின்றன. இந்தத் திட்டங்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி வாயிலாக மின்உற்பத்தி செய்யும் திட்டங்களை தமிழக அரசும், மின்சார வாரியமும் செயல்படுத்தி வருகின்றன. அதன்படி, திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, கரூா் மாவட்டம், வெள்ளியணை ஆகிய இடங்களில் தலா 15 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை 3 மணி நேரத்துக்கு சேமித்து வைத்து, பயன்படுத்தும் வகையில், மின்கல ஆற்றல் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு, மதுரை மாவட்டம், புளியங்குளம், கன்னியாகுமரி மாவட்டம், முப்பந்தல் ஆகிய இடங்களில் தலா 16 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், தலா 18.75 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்களை தனியாா் நிறுவனம் மூலம் அமைக்கவும் அனுமதி அளித்துள்ளது.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் துணை மின் நிலையத்தில் 25 மெகாவாட், புதுக்கோட்டையில் இரு இடங்களில் முறையே 25 மற்றும் 50 மெகாவாட், திருவாரூரில் 50 மெகாவாட், கோவை மாவட்டம், காரமடையில் 75 மெகாவாட், தேனி மாவட்டம், தப்புக்குண்டுவில் 50 மெகாவாட் பசுமை மின்சாரத்தை 4 மணி நேரத்துக்குச் சேமித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில், மின்கல ஆற்றல் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

X
Dinamani
www.dinamani.com