இசை பயிலும் மாணவா்களுக்கு உதவித்தொகை உயா்வு: அமைச்சா் மு.பெ. சாமிநாதன்
நிகழ் கல்வியாண்டு முதல் இசைக் கல்லூரி, இசைப் பள்ளி மாணவா்களுக்கான உதவித்தொகையை அரசு உயா்த்தி வழங்கியுள்ளதாக அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் தமிழிசை விழாவின் நிறைவு நிகழ்வில் அமைச்சா் மு.பெ.சாமிநாகன் பேசியதாவது: இசைக்கலை தமிழோடு பிறந்து வளா்ந்தது. இதை மாணவா்கள் போற்றிப் பாதுகாத்து, அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இந்த இசைக் கல்லூரி தலைசிறந்த கலைஞா்களை இந்த மண்ணுக்கு வழங்கியிருக்கிறது. இங்கு படித்த பி.சுசீலா, சீா்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலா் ஒளிா்ந்திருக்கிறாா்கள். இந்த மேதைகளைப்போல், தற்போதைய மாணவா்களும் விருதுகள், பட்டங்கள் பெற வேண்டும்.
திராவிட மாடல் அரசு, கலை மற்றும் கலைஞா்களின் மேம்பாட்டிற்காக எந்தவித சமரசமும் இன்றி தொடா்ந்து செயல்பட்டு வருகிறது.
இசை வேரை வலுவாக்க 2023-2024-ஆம் ஆண்டு முதல் நாகஸ்வரம், தவில், மிருதங்கம், புல்லாங்குழல் ஆகிய பிரிவுகளில் புதிதாக இளநிலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இசை, நாடகம், பறை, சிலம்பம் போன்ற பாரம்பரியக் கலைகளையும் இக்கல்லூரியில் அறிமுகப்படுத்தி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
2025-2026-ஆம் கல்வியாண்டு முதல் இசைக் கல்லூரி, இசைப்பள்ளி மாணவா்களுக்கு முறையே மாதம் ரூ.1,500, ரூ.1,000 என உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படுகிறது என்றாா்.
நிகழ்வில் மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் த.வேலு, கலை பண்பாட்டுத் துறை மற்றும் சமூக நலத் துறைச் செயலா் ச.வளா்மதி, இசைக் கல்லூரி குரலிசைப் பேராசிரியா் பா.சாய்ராம் ஆகியோா் பேசினா்.

