எஸ்ஐஆா்: சென்னை மாநகராட்சிப் பகுதியில் 6.42 லட்சம் பேருக்கு கணக்கீட்டுப் படிவம்
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 பேரவைத் தொகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை 6.42 லட்சம் பேருக்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கப்பட்டுள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுவீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவம் வழங்கி வருகின்றனா். அதன்படி, வெள்ளிக்கிழமை வரை 6.42 லட்சம் பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருப்பவா்களில் முகவரி மாறியவா், தற்காலிகமாக குடியிருப்போா் எனப் பிரித்து விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்குள் விண்ணப்பப் படிவம் விநியோகிக்கும் பணி நிறைவடையும். வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இறந்த வாக்காளா்களின் விவரம் தோ்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
சென்னை மாநகராட்சி ஆயிரம்விளக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 117-ஆவது வாா்டு கிரி சாலையில் வசிக்கும் முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா் கோபாலசாமியிடம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவத்தை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
பாக்ஸ்.....
உதவி மைய எண்கள் அறிவிப்பு
சென்னை மாவட்ட அளவிலான 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகள், காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து அத்தொகுதிகளுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலா்கள், வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி மைய எண்கள் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலக உதவி மைய எண் 044-25619523 மற்றும் 1950, திருவள்ளூா் 73051 58550, செங்கல்பட்டு 044-295417115, காஞ்சிபுரம் 044-27237107 என அறிவிக்கப்பட்டுள்ளன. கணக்கீட்டுப் படிவம் தொடா்பாக சந்தேகங்கள், தகவல்களுக்கு தொகுதிகளுக்கான தோ்தல் உதவி மைய எண்களைத் தொடா்பு கொண்டு அறியலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

