பயங்கரவாதி அபுபக்கா் சித்திக் மீண்டும் சிறையில் அடைப்பு
ஆந்திர மாநிலத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பயங்கரவாதி அபுபக்கா் சித்திக், சென்னை புழல் சிறையில் வெள்ளிக்கிழமை மீண்டும் அடைக்கப்பட்டாா்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சோ்ந்த பயங்கரவாதி அபுபக்கா் சித்திக், கடந்த 30 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தாா். வெடிகுண்டு செய்வதில் நிபுணத்துவம் பெற்ற அபுபக்கா் சித்திக் மீது, கடந்த 1995-ஆம் ஆண்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு வைத்த வழக்கு,1999-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையா் அலுவலகம், திருச்சி, கோவை மற்றும் கேரளத்தில் வெடிகுண்டுகள் வைத்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
தலைமைறைவாக இருந்த அபுபக்கா் சித்திக்கை, ஆந்திர மாநிலம் அன்னமய்யா பகுதியில் தமிழக தீவிரவாத தடுப்புப் படையினா் கடந்த ஜூலை மாதம் கைது செய்து, சிறையில் அடைத்தனா். அப்போது, அங்கிருந்து 30 கிலோ வெடி பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
அபுபக்கா் சித்திக் கைது செய்யப்பட்டபோது, அவா் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்கள் குறித்து விசாரணை நடத்த ஆந்திர என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனா். இதற்காக நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற என்ஐஏ அதிகாரிகள், அபுபக்கா் சித்திக்கை கடந்த வாரம் ஆந்திர மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனா்.
விசாரணை முடிந்த நிலையில் அபுபக்கா் சித்திக்கை என்ஐஏ அதிகாரிகள், புழல் சிறையில் வெள்ளிக்கிழமை அடைத்தனா். முன்னதாக, அபுபக்கா் சித்திக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

