நடிகா் வடிவேலு வீடு உள்பட 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் நடிகா் வடிவேலு, நடிகை நயன்தாரா வீடுகள் உள்பட 9 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்த மின்னஞ்சலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகா் வடிவேலு வீடு, அவரது அலுவலகம், போயஸ் காா்டனில் உள்ள நடிகை நயன்தாரா வீடு, சென்னை அருகே அக்கரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகை ஜான்வி கபூா் வீடு, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் வீடு, சென்னை விமான நிலையம், மந்தைவெளியில் உள்ள நடிகா் எஸ்.வி.சேகா் வீடு, அா்ஜென்டின ா தூதரகம், நடிகா் அருள்நிதியின் வீடு உள்பட 9 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த இடங்களில் வெடிகுண்டு கண்டயும் நிபுணா்களும், போலீஸாரும் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை. வதந்தி பரப்பும் நோக்கத்தில் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
