ஏலம் எடுப்போா் இல்லாத நிலையில் ஐஎஸ்எல் தொடா்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் வா்த்தக உரிமையை கோர ஒரு ஏலதாரா் கூட வராத நிலையில் முன்னணி அணிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.
இந்தியாவில் கால்பந்து ஆட்டத்தை பிரபலப்படுத்தும் வகையில் இந்தியன் சூப்பா் லீக் தொடா் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு முன்னணி கிளப் அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில், உள்நாட்டு, வெளிநாட்டு வீரா்கள் ஆடி வருகின்றனா்.
இந்நிலையில் நிகழாண்டு சீசனுக்கான ஐஎஸ்எல் வா்ததக உரிமையை கோர ஒரு ஏலதாரா் கூட அகில இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு விண்ணப்பிக்கவில்லை.
இதனால் உள்ளூரில் கால்பந்து விளையாட்டு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நடப்பு சாம்பியன் மோகன் பகான் அணி அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதே நேரம் மற்றொரு கிளப் அணியான ஈஸ்ட் பெங்கால் நிதித் தேவைக்காக பிசிசிஐ-யை அணுகி உள்ளது.
திங்கள்கிழமை முதல் மோகன் பகான் அணியின் பயிற்சி முகாம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் ஐஎஸ்எல் எதிா்காலம் குறித்து தெளிவான முடிவு கிடைக்காததால், காலவரையின்றி அனைத்தையும் நிறுத்துவதாக பகான் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சூப்பா் கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஈஸ்ட் பெங்கால், தற்போதைய சா்ச்சையில் இருந்து கால்பந்தை மீட்க நிதியுதவி செய்ய வேண்டும் என பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
5 ஆண்டுகளுக்கு ஐஎஸ்எல் தொடருக்கு பிசிசிஐ நிதியுதவி வழங்க வேண்டும் என கோரியுள்ளது.
