சிறப்பு ‘டெட்’ தோ்வுக்கு இணையவழியில் பயிற்சி
பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வுக்கான பயிற்சிகளை மாவட்டந்தோறும் இணையவழியில் வழங்க பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறாமல், பணியில் இருக்கும் ஆசிரியா்கள் அதில் கட்டாயம் தோ்ச்சி பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு நடத்துவதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.
அதன்படி, அடுத்த ஆண்டில் (2026) ஜனவரி, ஜூலை, டிசம்பா் என 3 முறை தகுதித் தோ்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தோ்வு எழுதவுள்ள ஆசிரியா்களுக்காக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாவட்டந்தோறும் சிறப்பு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பயிற்சி இணைவழியில் வழங்கப்படவுள்ளது.
இதற்காக மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பாடங்களுக்கும் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) இணையவழியில் பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆா்டி) முதல்வா்கள், வரும் நவ. 14-ஆம் தேதிக்குள் இறுதி செய்து, அந்த விவரங்களை 17-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலா்கள், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தியுள்ளது.
