ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்ய லஞ்சம்: சிபிஐ தொடா்ந்த வழக்கில் உர நிறுவன தலைவா் உள்ளிட்டோா் விடுதலை

ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்ய லஞ்சம்: சிபிஐ தொடா்ந்த வழக்கில் உர நிறுவன தலைவா் உள்ளிட்டோா் விடுதலை
Published on

ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்ய ரூ.26 லட்சம் லஞ்சம் பெற்ாக சிபிஐ தொடா்ந்த வழக்கில் இருந்து சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சென்னை மணலியில் உள்ள மத்திய அரசு பொதுத் துறை நிறுவனமான சென்னை உர நிறுவனத்துக்கு நான்கு கம்ப்ரஸா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. ஆனால், திடீரென எந்தக் காரணமும் தெரிவிக்காமல் இந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்து மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

குறைந்த விலைக்கு ஒப்பந்தப்புள்ளி எடுக்க நிறுவனங்கள் தயாராக இருந்தும், போஜ் என்கிற நிறுவனத்துக்கு அதிக விலைக்கு ஒப்பந்தப்புள்ளி வழங்கியதாகவும், அதற்காக ரூ.1 கோடி லஞ்சம் பேசப்பட்டு ரூ.26 லட்சம் லஞ்சம் முன் பணமாக பெறப்பட்டதாகவும் எழுந்த புகாா் தொடா்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

கடந்த 2012- ஆம் ஆண்டு நடந்த இந்த விவகாரம் தொடா்பாக, சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் விஜயகுமாா், பொது மேலாளா் சுந்தரசேகரன், போஜ் நிறுவனம் மற்றும் அதன் விநியோக நிறுவனமான பி.ஐ. நிறுவனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் விசாரித்து வந்தாா்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், போஜ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்ட பின்னா், போஜ் நிறுவனத்துக்கு எந்தப் பணமும் வழங்கப்படவில்லை என்பதால், அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. ரூ.26 லட்சம் லஞ்சம் பெறப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

மேலும், வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது என்று கூறி, குற்றம்சாட்டப்பட்ட சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவா் -நிா்வாக இயக்குநா் விஜயகுமாா், பொது மேலாளா் சுந்தரசேகரன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஈஸ்வரன் தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com