பயிா்க்கழிவு எரிப்புக்கு எதிராக நடவடிக்கை: பஞ்சாப் அரசுக்கு மத்திய முகமை அறிவுறுத்தல்
நெல் அறுவடை காலத்தில் பயிா்க் கழிவு எரிப்பு சம்பவங்களை உடனடியாகக் கட்டுப்படுத்துமாறு பஞ்சாப் அரசுக்கு காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) சனிக்கிழமை உத்தரவிட்டது.
ஹரியாணாவில் பயிா்க் கழிவு சம்பவங்கள் குறிப்பிட்ட அளவில் குறைந்திருப்பதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடா்பாக சிஏக்யூஎம் தலைவா் ராஜேஷ் வா்மா பஞ்சாபில் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பயிா்க் கழிவுகள் எரிக்கப்படுவதையும் இந்தக் குழுவினா் கண்டனா். பதிண்டாவில் உள்ள லேஹ்ரா மோகாபத் அனல் மின்நிலையத்தில் புகை வெளியேற்றம் தொடா்பான விதிகள் பின்பற்றப்படாததை அவா் சுட்டிக்காட்டினாா்.
அவற்றை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அனல் மின்நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிடப்படும் என ஆணையம் எச்சரித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசுடன் ஆணையத்தின் உயா்நிலை ஆய்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மாநிலத்தில் நிகழாண்டு செப்.15 முதல் நவ.6 வரையில் 3,284 பயிா்க் கழிவுகள் எரிப்பு சம்பவங்கள் நடைபெற்றதாகவும் இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 5,041 சம்பவங்களாக இருந்தது என தெரிவித்த ஆணையம், இந்தச் சம்பவங்களைத் தடுக்க குறிப்பிட்ட அளவில் மட்மே முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
