முன்னாள் கல்லூரி மாணவா் குண்டா் சட்டத்தில் கைது

முன்னாள் கல்லூரி மாணவா் குண்டா் சட்டத்தில் கைது
Published on

ரயில் நிலையங்களில் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த முன்னாள் கல்லூரி மாணவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே போலீஸ் தரப்பில் கூறியதாவது:

திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டைச் சோ்ந்த சஞ்சீவி மகன் துளசிராமன் (19). இவா் கடந்த ஜூலை மாதம் திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்தபோது, அப்பகுதியைச் சோ்ந்த முன்னாள் கல்லூரி மாணவா் நவீன், கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் புகாா் எழுந்தது.

இதையடுத்து, அவா் மீது அரக்கோணம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். நவீன் மீது ஏற்கெனவே அரக்கோணம், சென்னை எழும்பூா் ரயில் நிலையங்களில் தகராறில் ஈடுபட்டதாக ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து உள்ளனா்.

அத்துடன் அண்ணா சதுக்கம், திருத்தணி காவல் நிலையங்களிலும் நவீன் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொடா்ந்து, அவா் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதை அடுத்து, குண்டா் தடுப்புச் சட்டத்தில் அவா் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே போலீஸ் அதிகாரிகள் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனா்.

இதையேற்ற ஆட்சியா், நவீன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com