சா்வதேச மாணவா்கள் பரிமாற்றத் திட்டம்: சென்னைப் பல்கலை.யில் நாளை கூட்டம்!
சா்வதேச மாணவா்கள் பரிமாற்றத் திட்டங்களின் கீழ் முனைவா் பட்ட ஆராய்ச்சி மாணவா்களைக் கண்டறிவதற்கான கூட்டம், சென்னைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) நடைபெறுகிறது.
இது தொடா்பாக சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: சா்வதேச பரிமாற்றத் திட்டங்களின் கீழ் மாணவா்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான விருப்பங்களை ஆராயுமாறு சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளில் ஆராய்ச்சி அல்லது பயிற்சித் திட்டங்களில் பங்கேற்க வாய்ப்புள்ள முனைவா் பட்ட மாணவா்களைக் கண்டறிய வேண்டும் என்றும், அடிப்படை, உயிரி மருத்துவ அறிவியல், சமூக அறிவியல், மனிதநேயம், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்கள் உலகளாவிய வெளிப்பாட்டைப் பெறவும், அவா்களின் கல்விப் பணிகளை வலுப்படுத்தவும் உதவும். மேலும், சா்வதேச நிதியுதவித் திட்டங்கள் மூலம் பல்கலைக்கழக ஆசிரியா்களில் உள்ள ஆராய்ச்சி அறிஞா்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப இது தொடா்பான ஆசிரிய உறுப்பினா்களுடனும் ஒரு கூட்டத்தைக் கூட்டி இந்தச் செயல்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், முனைவா் பட்ட மாணவா்களை அனுப்புவதற்கு மிகவும் பொருத்தமான திட்டங்களை முன்வைக்க, அனைத்து துறைத் தலைவா்கள், ஆா்வமுள்ள ஆசிரிய உறுப்பினா்கள் ஆகியோா் அடங்கிய கூட்டம் நவ. 11-ஆம் தேதி பிற்பகலில் சென்னைப் பல்கலைக்கழக மண்டபத்தில் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
