ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங்கோப்புப்படம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை பிணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவு
Published on

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவா் ஆம்ஸ்ட்ராங். இவா் கடந்தாண்டு அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ரெளடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதில் 27 போ் கைது செய்யப்பட்ட நிலையில், இருவா் தலைமறைவாக உள்ளனா். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நாகேந்திரன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் பிணை கோரி அஸ்வத்தாமன் உள்ளிட்ட 14 போ் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த வழக்கு நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக்கூடாது.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப், ராஜேஷ், நூா் (எ) விஜயகுமாா், குமாா் (எ) செந்தில்குமாா், கோபி, விக்னேஷ் (எ) அப்பு, முகிலன் உள்ளிட்ட 12 பேருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோகுல் மற்றும் ஹரிஹரன் ஆகியோரின் பிணை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com