ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி
முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஒப்பந்தப்புள்ளி முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்? என்று லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முந்தைய அதிமுக ஆட்சியின்போது, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தாா். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியதில் ரூ.98.25 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அறப்போா் இயக்கம் புகாா் அளித்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, ஐஏஎஸ் அதிகாரிகள், தனியாா் ஒப்பந்த நிறுவனங்களின் உரிமையாளா்கள் என பலா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். குற்றப்பத்திரிகையும் தயாா் செய்தனா். ஆனால், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை நீதிமன்றத்தில் விசாரிப்பதற்காக மத்திய அரசிடம் அனுமதி ஒப்புதல் பெறவில்லை.
இதனிடையே அறப்போா் இயக்கம், லஞ்ச ஒழிப்புத் துறை காவல் கண்காணிப்பாளா் விமலாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ராஜ்திலக், 12,000 பக்கங்களைக் கொண்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை ஆங்கிலத்தில் மொழிபெயா்த்து, கடந்த 7-ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் அனுமதிக்காக போலீஸாா் காத்திருக்கின்றனா் என்றாா்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கோவை மாநகராட்சி துணை ஆணையா் காந்திமதி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்கை நடத்த 2024-ஆம் ஆண்டே அனுமதி பெற்றுள்ளனா். ஆனால், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையா் கே.எஸ்.கந்தசாமி, கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையா் விஜய காா்த்திகேயன் ஆகியோருக்கு எதிராக வழக்கை நடத்த மத்திய அரசின் அனுமதி பெற 19 மாதங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினாா்.
இந்த காலதாமதத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை. தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் வருகிறது. ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் விருப்பமாக உள்ளது. எனவே, அமைச்சா்கள், உயா் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளின் விசாரணைக்கு போலீஸாா் முன்னுரிமை அளிக்க வேண்டும். இல்லையெனில், அரசு மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவாா்கள் என்று கூறினாா்.
பின்னா், 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின் அனுமதி பெற கால தாமதம் ஏற்பட்டது ஏன்? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

