.jpg?rect=0%2C31%2C304%2C171&w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?rect=0%2C31%2C304%2C171&w=480&auto=format%2Ccompress&fit=max)
மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை நெருங்கி வருவதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் ஏ.அருண் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள், நடிகர், நடிகைகளின் வீடுகள், அலுவலகங்கள், விமானங்கள், விமான நிலையங்கள், கோயில்கள் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு தினமும் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 342 மின்னஞ்சல் மிரட்டல் வந்துள்ளன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள தமிழக காவல் துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கும் அனுப்பியுள்ளோம். அதோடு இந்த வழக்குகளில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியையும் நாடியுள்ளோம்.
இந்த மிரட்டல்கள் வெளிநாடுகளில் இருந்து வரவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஏனெனில் சட்ட விரோதச் செயலுக்கு பயன்படுத்தப்படும் டார் (பஞத), விபிஎன் (யடச) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பப்படுவதால், அதை வைத்து துப்பு துலக்குவதில் தொடர்ந்து இடர்ப்பாடு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இதன் பின்னணியில் இருவர் இருப்பதும், அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை நெருங்கி வருகிறோம். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
குற்றங்கள் குறைந்துள்ளன: சென்னையில் ரௌடிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு ஏற்கெனவே இருந்த காவல் துறையின் ரௌடிகள் பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கெனவே இருந்த பட்டியலில் 4,200 ரௌடிகள் இருந்தனர். மறு ஆய்வுக்கு பின்னர் 4,979 ரௌடிகள் இருக்கின்றனர். இந்த ரௌடிகள் ஏ பிளஸ், ஏ, பி, சி என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ரௌடிகள் அனைவரும் தீவிர கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் ரௌடிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
அதேபோல சென்னையில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் அதிக அளவு குறைந்துள்ளன. உதாரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 102 கொலை வழக்குகள் பதிவாகின. இந்த ஆண்டு இதுவரை 82 வழக்குகளே பதிவாகியுள்ளன. தங்கச் சங்கிலி பறிப்புகள் 35-இல இருந்து 21-ஆகவும் கைப்பேசி பறிப்பு 275-இல் இருந்து 144-ஆக குறைந்துள்ளன. ரௌடிகள் மோதல், கொலைகள் பெருமளவு குறைந்துள்ளன.
மெட்ரோ ரயில் நிலையங்கள்: தில்லி கார் வெடிப்பு சம்பவத்துக்குப் பின்னர் சென்னையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக மெட்ரோ ரயில் நிலையங்கள் இருக்கும் பகுதிகளில் 1,200 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு பல ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படாமல் விசாரணையிலேயே வைக்கப்பட்டிருக்கும் நுற்றுக்கணக்கான மனுக்கள், தற்போது விரைவாக விசாரணை செய்து முடித்து வைக்கப்பட்டு வருகிறது.
வாகனங்களில் விளக்குகள்: போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பதியப்படும் வழக்குகளின் நிலுவை அபாரதத்தை வசூலிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முந்தை காலத்தை விட இப்போது அபராதம் உடனடியாக வசூலிக்கப்படுகிறது என்றார் அவர்.பேட்டியின்போது நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் மு.ராமமூர்த்தி உடனிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.