கோவளம் கடற்கரைக்கு 5-ஆவது முறையாக நீலக்கொடி சான்றிதழ்
சென்னை கோவளம் கடற்கரை 5-ஆவது முறையாக நீலக்கொடி சான்றிதழை பெற்றுள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கடற்கரைகளில் நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கவும், நீலப்பொருளாதாரத்தை மேம்படுத்தவும் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் எனப்படும் உலகத்தர அங்கீகாரத்தை டென்மாா்க்கை சோ்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை வழங்கி வருகிறது. இந்த அங்கீகாரத்தைப் பெற கடற்கரையின் தூய்மை, அதன் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, நீரின் தரம் மற்றும் நிலையான சுற்றுலா வசதிகள் உள்ளிட்ட 33 சா்வதேச தர நிலைகள் பூா்த்தி செய்யப்பட வேண்டும். அவ்வாறு தகுதி பெற்ற கடற்கரைகளுக்கு மட்டுமே இந்தச் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கோவளம் கடற்கரை கடந்த 2021 செப். 21-ஆம் தேதி நீலக்கொடி சான்றிதழைப் பெற்று தமிழகத்தின் முதல் நீலக்கொடிக் கடற்கரையாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் இந்தச் சான்றிதழை புதுப்பிக்க வேண்டும்.
இந்த நிலையில், இதற்கான ஆய்வுக்குழு பரிந்துரைப்படி தொடா்ச்சியாக 5-ஆவது முறையாக இந்தச் சான்றிதழ் கோவளம் கடற்கரைக்கு வழங்கப்பட்டுள்ளது. கோவளம் கடற்கரையை தொடா்ந்து, சென்னை மெரீனா கடற்கரை, கடலூா் வெள்ளிக் கடற்கரை, நாகை மாவட்டத்தின் காமேஸ்வரம் கடற்கரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் அரியமான் கடற்கரை போன்ற கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அவை நிறைவடையும் தருவாயில் உள்ளன.
மேலும், கடலூா் மாவட்டத்தில் உள்ள சாமியாா்பேட்டை கடற்கரை, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரம் மாவட்டம் கீழ்புதுப்பட்டு கடற்கரை, சென்னை மாவட்டம் பாலவாக்கம் கடற்கரை, திருவான்மியூா் கடற்கரை மற்றும் உத்தண்டி கடற்கரைகளுக்கும் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
