இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக, சென்னையில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இரிடியத்தை விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், சேவை கட்டணம் செலுத்தினால் இந்தப் பணத்தை வெளியே கொண்டு வந்துவிடலாம் என்றும், ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என்று பொய்யான தகவலை கூறியும் தமிழகத்தைச் சேர்ந்த பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி நடைபெறுவதாகவும் சிபிசிஐடி-க்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அதன்பேரில் சிபிசிஐடி அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, விசாரணை அடிப்படையில் சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, திருச்சி, கரூர், நெல்லை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கடந்த செப்டம்பர் மாதம் சோதனையில் ஈடுபட்டனர். இதில் இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடந்த அக்.25-ஆம் தேதி மேலும் 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் 8 பேர் கைது: இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற சதீஷ் (39), கோமதி (38), கரிகாலன் (62), முரளி (64), அருண் வில்பர்ட் (43), மார்ட்டின் (49), கல்யாணசுந்தரம் (63), மதன்ரூபன் (49) ஆகிய 8 பேரை கைது செய்ததாக சிபிசிஐடி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இவர்களது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கிருந்து ஒரு மடிக்கணினி, 3 கைப்பேசிகள், ரூபாய் நோட்டு எண்ணும் இயந்திரம், போலி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், ஐநூறு ரூபாய் நோட்டுகள் 130 கட்டுகள், ரிசர்வ் வங்கி போலி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் போலி சான்றிதழ்கள், போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இரிடியம் மோசடி தொடர்பாக தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 65 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.