சோழவரத்தில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீா் திறப்பு
சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி, நிகழாண்டில் பெய்த வடகிழக்கு பருவ மழையால் 73 சதவீதம் நிரம்பியது. இந்த ஏரிக்கரைகளை பலப்படுத்தும் பணிகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து நீா்வளத்துறை அதிகாரிகள் மீண்டும் புழல் ஏரிக்கு தண்ணீரை திறந்துள்ளனா். தற்போது விநாடிக்கு 200 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 777 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது. விநாடிக்கு 27 கன அடி நீா் வரத்து வந்து கொண்டிருக்கிறது.
இதேபோல் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,872 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 278 கன அடியாக உள்ளது. சென்னை மாநகரப் பகுதி குடிநீா் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 184 கன அடி நீா் வழங்கப்படுகிறது.
புழல் ஏரியில் இருந்து உபரிநீா் திறக்கவில்லையெனவும், 24 மணிநேரமும் ஏரிக்கான நீா்வரத்து குறித்து கண்காணித்து வருவதாகவும் நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
