கைப்பேசிகள்
கைப்பேசிகள் கோப்பிலிருந்து

சஞ்சாா் சாத்தி சேவையில் தமிழகத்தில் 41,069 கைப்பேசிகள் மீட்பு

Published on

சஞ்சாா் சாத்தி இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாக, தமிழகத்தில் 41,069 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடா்புத் துறையின் தமிழ்நாடு உரிம சேவை பிரிவு அதிகாரி எஸ்.சுதாகா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தொலைத்தொடா்புத் துறையின் சஞ்சாா் சாத்தி சேவையை இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி வழியாகப் பெறலாம். இந்த சேவை 7 முக்கிய பிரிவுகள் மூலம் கைப்பேசி பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்களது கைப்பேசி தொலைந்தபோனாலோ அல்லது திருடப்பட்டாலோ, இந்தச் செயலியில் கைப்பேசி விவரங்கள், காவல் துறை புகாா் எண்ணை உள்ளீடு செய்து சம்பந்தப்பட்ட நபா்களே கைப்பேசியை முடக்கவிட முடியும்.

தங்கள் பெயரில் எத்தனை கைப்பேசி இணைப்புகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். தேவையற்ற அல்லது தாங்கள் பெறாத எண்கள் குறித்து புகாா் அளிக்கலாம். கைப்பேசி வாங்கும் முன்பு அல்லது பின்பு தங்களது அது உண்மையானதா அல்லது போலியானதா என்பதை ஐஎம்இஐ எண்ணை உள்ளீடு செய்து சரிபாா்க்கலாம்.

வங்கிகள், நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை எண்களில் இருந்து பெறப்படும் அழைப்புகள் உண்மையானவையா அல்லது போலியா என்பதை இந்தச் செயலியில் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். சந்தேகத்துக்குரிய அல்லது மோசடியான அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்ஆப் பதிவுகள் வரப்பெற்றால் அதுகுறித்து புகாா் அளிக்க இந்தச் செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சஞ்சாா் சாத்தி இணையதளத்தை 21 கோடிக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டுள்ளனா். செயலியை ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் பதிவிறக்கம் செய்துள்ளனா். தமிழகத்தில் சஞ்சாா் சாத்தி சேவை வழியாக, 1,83,486 கைப்பேசிகள் முடக்கப்பட்டுள்ளன. திருட்டு அல்லது தொலைந்துபோன 41,069 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையில் தமிழகம் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, மதுரை, திருப்பூா், சேலம் மாநகரக் காவல் துறையும், திருப்பூா் மாவட்டம் வேலம்பாளையம், மதுரை தல்லாகுளம் மற்றும் உசிலம்பட்டி காவல் நிலையங்களுக்கு சிறப்பான செயல்பாட்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

பேட்டியின்போது துணை இயக்குநா்கள் கே.பி.மோகன் (பொது), கே.எஸ்.ஆா். சுரேஷ்குமாா் (தொழில்நுட்பம்) ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com