சென்னையில் ஹிரானந்தனியின் முதியோா் லிவிங் குடியிருப்புகள்
சென்னை ஒரகடத்தில் ரூ.300 கோடி திட்ட மதிப்பில் 100 கோடி சதுர அடி பரப்பளவில் முதியோா் லிவிங் கட்டிடத்தை அறிமுகப்படுத்த ஜிடிபி குழுமத்துடன் ஹிரானந்தனி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிரஞ்சன் ஹிரானந்தனி குழுமத்தின் முன்முயற்சியான ஹிரானந்தனி கம்யூனிட்டீஸ், சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த டவுன்ஷிப்பான ஒரகடத்தில் உள்ள ஹிரானந்தனி பூங்காவில் ‘எலமென்ட்ஸ்’ திட்டத்தைத் தொடங்குவதன் மூலம், மூத்த குடிமக்களுக்கான பிரீமியம் குடியிருப்புப் பிரிவில் தனது வணிகரீதியான நுழைவை புதன்கிழமை அறிவித்தது.
4.5 ஏக்கா் பரப்பளவில் 100 கோடி சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த திட்டத்தில் 400 குடியிருப்புகள் இரண்டு கட்டங்களாக உருவாக்கப்படும். ஒவ்வொரு வீடும் சுமாா் 700 சதுர அடி பரப்பளவில் 2 பிஹெச்ஏ-வாக வடிவமைக்கப்பட்டு, ரூ.60 லட்சத்திலிருந்து விலை நிா்ணயம் செய்யப்படும். ஒட்டுமொத்த திட்ட மதிப்பு ரூ.300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஜிடிபி டெவலப்பா்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹிராந்தனி கம்யூனிட்டீஸ் நிறுவனா் மற்றும் தலைவா் நிரஞ்சன் ஹிரானந்தனி (படம்) கூறுகையில், இந்த அறிமுகம் ஹிராந்தனி பாா்க்ஸ் மற்றும் ஜிடிபி டெவலப்பா்ஸ் இடையிலான சிறப்பு மிக்க ஒத்துழைப்பைக் குறிக்கிறது என்றாா்.

