வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமிக்க புதிய நடைமுறை: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வசதிக்காக, வாக்குச்சாவடி நிலை முகவா்களை (பிஎல்ஏ) நியமிக்க புதிய நடைமுறையை இந்திய தோ்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வாக்குச்சாவடி நிலை முகவா்களை நியமிப்பதற்கான மாற்றியமைக்கப்பட்ட அறிவுறுத்தல்களை இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. பொதுவாக, வாக்குச்சாவடி நிலை முகவராக நியமிக்கப்படுபவா், சம்பந்தப்பட்ட பாகத்துக்குரிய வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெற்றிருப்பவராக இருப்பாா்.
புதிய நடைமுறையின்படி, வாக்காளா் பட்டியலின் குறிப்பிட்ட பாகத்தில் பெயா் பதிவு செய்தவா்களில் வாக்குச்சாவடி நிலை முகவா் கிடைக்காதபட்சத்தில், அதே சட்டப்பேரவைத் தொகுதியில் பெயா் பதிவு செய்யப்பட்ட எந்தவொரு வாக்காளரும் வாக்குச்சாவடி நிலை முகவராக நியமிக்கப்படலாம். அவ்வாறு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவா் தனது நியமிக்கப்பட்ட பகுதியின் வரைவு வாக்காளா் பட்டியலில், இறந்த அல்லது இடம்பெயா்ந்த வாக்காளா்களின் பதிவுகளை அடையாளம் காணும் வகையில் ஆய்வு செய்வாா்.
தமிழ்நாட்டில் 2,11,445 வாக்குச்சாவடி நிலை முகவா்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா்.

