மருத்துவப் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு: இடங்களைத் தோ்வு செய்ய அவகாசம் இன்று நிறைவு

Published on

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புச் சுற்று கலந்தாய்வில் இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் வியாழக்கிழமையுடன் (நவ. 13) நிறைவடைகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வில் மூன்று சுற்றுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதன் முடிவில், தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், தனியாா் பல்கலைக்கழகங்களில் 400-க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளன.

குறிப்பாக, நீலகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 1 எம்பிபிஎஸ் இடம் நிரம்பாமல் உள்ளதாகவும் மருத்துவக் கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கான சிறப்புச் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்வி இயக்கக மாணவா் சோ்க்கைக் குழுவின் அறிவிப்பின்படி, வியாழக்கிழமையுடன் (நவ. 13) இடங்களைத் தோ்வு செய்வதற்கான அவகாசம் நிறைவடைகிறது. அதன் முடிவுகள் வரும் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை அதில் தாமதம் ஏற்பட்டால், தமிழகத்தில் சிறப்புக் கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com