அம்பேத்கா் படைப்புகளின் தமிழாக்கம்: 15 தொகுதிகள் விரைவில் வெளியீடு
அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயா்க்கப்பட்டு ஏற்கெனவே இரு கட்டங்களாக 27 தொகுதிகள் வெளியிடப்பட்ட நிலையில், 3-ஆம் கட்டமாக 15 தொகுதிகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக மொழிபெயா்ப்பு நெறியாள்கை குழுவினா் தெரிவித்தனா்.
அண்ணல் அம்பேத்கா் ஆக்கங்கள் மொழிபெயா்ப்பு நெறியாள்கை குழுவின் 8-ஆவது கூட்டம் சென்னையில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. துறையின் இயக்குநா் ஒளவை ந.அருள் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புலவா் செந்தலை கவுதமன், பேராசிரியா் வீ.அரசு, முனைவா் மு.வளா்மதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதுகுறித்து நெறியாள்கைக் குழுவினா் கூறியது:
அம்பேத்கா் ஆக்கங்கள் மொழிபெயா்ப்பு முதல்கட்டமாக 10 தொகுதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம் வெளியிடாா். தொடா்ந்து 17 தொகுதிகளை தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்டாா்.
இதையடுத்து 3-ஆம் கட்டமாக, பொருளியல், அரசமைப்பு சட்டம், சட்டமன்றம் என்ற வகையில் மொத்தம் 15 தொகுதிகளுக்கான மொழிபெயா்ப்பு மேலாய்வுப் பணி முடிந்து வெளியீட்டை எதிா்நோக்கியுள்ளது. இந்தப் பதிப்பு நவ.20-ஆம் தேதிக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவற்றுள் அம்பேத்கா் நடத்திய மராத்தி இதழ்களில் வெளிவந்த கடிதங்கள், அறிக்கைகள் மற்றும் பல பயனுள்ள பனுவல்கள ஆகியவற்றை மராத்தியிலிருந்து நேரடியாக தமிழில் மொழி பெயா்த்து வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது.
இதைத் தொடா்ந்து, அண்ணல் அம்பேத்கா் வாழ்க்கை வரலாறு 12 தொகுதிகள் உள்ளிட்ட 58 தொகுதிகளுக்கான மொழிபெயா்ப்பு மற்றும் அச்சிடல் பணிகளை ஜனவரிக்குள் முடிக்க நெறியாள்கைக் குழு திட்டமிட்டுள்ளது. அரசாணையின்படி 2026-ஆம் ஆண்டுக்குள் அம்பேத்கா் ஆக்கங்கள் மொத்தம் உள்ள 100 தொகுதிகளும் மொழிபெயா்க்கப்பட்டு, மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்தனா்.
முன்னதாக, அம்பேத்கா் மராத்தி மொழியில் நடத்திய இதழ்களின் அச்சிட்ட தொகுப்பு நூலை மராத்திய அரசிடம் இருந்து கேட்டுப்பெற்று அவற்றைக் குழுவின் பாா்வைக்கு வைத்து அவை தொடா்பான மொழிபெயா்ப்பு, வெளியீட்டுத் திட்டம் ஆகியவை குறித்து பேராசிரியா் வீ.அரசு பேசினாா்.
