தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) தமிழகத்தில் இதுவரை 5 கோடிக்கும் (78.09 சதவீதம்) மேற்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, முதல்கட்டமாக அங்கு எஸ்ஐஆா் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடா்ந்து, எஸ்ஐஆரின் 2-ஆவது கட்டம் தமிழக உள்பட 9 மாநிலங்கள், புதுச்சேரி உள்பட 3 யூனியன் பிரதேசங்களில் கடந்த நவ. 4-ஆம் தேதி தொடங்கியது.
இதையொட்டி, இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா்களுக்குக் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தோ்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கடந்த அக். 27-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 6,41,14,587 வாக்காளா்கள் உள்ளனா். 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களும், 2,11,445 வாக்குச்சாவடி நிலை முகவா்களும் இருக்கின்றனா். தமிழ்நாட்டில் விநியோகிக்க 6,41,14,582 கணக்கீட்டுப் படிவங்கள் அச்சடிக்கப்பட்டன. அவற்றில் இதுவரை 5,00,67,045 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது அச்சடிக்கப்பட்ட மொத்தப் படிவத்தில் 78.09 சதவீதமாகும்.
புதுச்சேரியில் 93.04% படிவங்கள்...: அதிகபட்சமாக லட்சத்தீவில் 100 சதவீதம் படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. கோவாவில் 99.99 சதவீத படிவங்களும், புதுச்சேரியில் 93.04 சதவீத படிவங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அந்தமான்-நிகோபாரில் 89.22 சதவீதம், மேற்கு வங்கத்தில் 88.8 சதவீதம், குஜராத்தில் 88.08 சதவீதம், ராஜஸ்தானில் 70.94 சதவீதம், உத்தர பிரதேசத்தில் 69.95 சதவீதம், சத்தீஸ்கரில் 63.75 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 53.83 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக கேரளத்தில் 49.55 சதவீத படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
37.05 கோடி படிவங்கள் விநியோகம்: இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 37,05,68,109 படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது மொத்தம் 72.66 சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

