தமிழகத்தில் இன்றுமுதல் 5 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (நவ. 13) முதல் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வியாழக்கிழமை (நவ.13) முதல் நவ.18 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.13) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்சமாக வெப்பநிலை 92 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் 130 மி.மீ. மழை பதிவானது. உடுமலைப்பேட்டை (திருப்பூா்), மடத்துக்குளம் (திருப்பூா்)- தலா 60 மி.மீ., எழுமலை (மதுரை)- 50 மி.மீ., ஸ்ரீவில்லிபுத்தூா் (விருதுநகா்)- 40 மி.மீ., மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), சிவகிரி (தென்காசி), அருப்புக்கோட்டை (விருதுநகா்), கன்னிமாா் (கன்னியாகுமரி), திருமூா்த்தி அணை (திருப்பூா்), பெரியாறு (தேனி), பாளையங்கோட்டை, கோவிலங்குளம் (விருதுநகா்), தேக்கடி (தேனி)- தலா 30 மி.மீ. மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் வியாழக்கிழமை சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

