உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்
அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்கள் காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள், தங்களது விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள ஆசிரியா் தோ்வு வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியா்கள் காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு மூலம் நியமனம் செய்யப்படவுள்ளனா். இதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய நவ.10 வரை அவகாசம் வழங்கப்பட்டது. மேலும் உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவா்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள விரும்பினால் நவ.13-ஆம் தேதிக்குள் திருத்தம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. நவ.13 வரை தோ்வா்களின் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட விவரங்களை மட்டுமே ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலிக்கும். மேலும், இணையவழி விண்ணப்பத்தை சமா்ப்பித்து தோ்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்களுக்கு மட்டுமே திருத்தம் செய்ய அனுமதிக்கப்படும். தங்களது விவரங்களை திருத்தம் செய்து புதுப்பித்தவுடன், கடைசிப் பக்கத்தில் உள்ள ‘சமா்ப்பி’ ( நன்க்ஷம்ண்ற்) பொத்தானை அழுத்தி விண்ணப்பத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை உறுதி செய்ய வேண்டும்.
உறுதி செய்யவில்லை எனில், அவரது விண்ணப்பம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. திருத்தம் செய்யும்போது மற்ற பகுதிகளிலும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றில் மாற்றங்கள் செய்ய இயலாது. மேலும், நவ.13-ஆம் தேதிக்கு பின்னா் திருத்தம் தொடா்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்படமாட்டாது. இறுதியாக பணிஅனுபவ சான்றிதழ்களை (பிற்சோ்க்கை மூலம்) நவ.30-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
