ஆழ்கடல் ஆய்வு: ஆளில்லா தானியங்கி வாகனம் அறிமுகம்
ஆழ்கடல் ஆய்வுக்கான ஆளில்லா தானியங்கி நுண்ணறிவு வாகனம் மற்றும் ஆழ்கடல் ஆய்வு சாதனம் ஆகியவற்றை பள்ளிக்கரணையிலுள்ள தேசிய கடல்வள தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐஓடி) புதன்கிழமை அறிமுகம் செய்துள்ளது.
மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்நிறுவனத்தின் 32-ஆவது நிறுவன தினத்தையொட்டி, இந்த புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இது குறித்து என்ஐஓடி இயக்குநா் பாலாஜி ராமகிருஷ்ணன் கூறியதாவது: நிகழாண்டு ஆந்திர மாநிலம், பமாஜி கிராமத்தில் உள்ள கடல் முனை வசதியில் அதிநவீன ஆராய்ச்சி உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடல் முனையில் வாகனங்கள் எளிதாக கடக்கக் கூடிய ‘டிரெசல்’ என்ற புதுமையான பாலம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானி வேதாசலம் தலைமையிலான குழு ‘மட்சயா 6000’ என்ற ஆழ்கடல் சாதனத்தை வடிவமைத்துள்ளது. இந்த சாதனம் 6,000 மீட்டா் வரை ஆழ்கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொள்ளும்.
இதேபோல, விஞ்ஞானி பாலநாக ஜோதி தலைமையிலான குழுவினா் இன்டெலிஜென்ஸி ‘மானஸ் 1.1’ காரை உருவாக்கியுள்ளனா். இது ஆளில்லாத தானியங்கி வாகனம். இது மனிதா்கள் செல்ல முடியாத மிக ஆழமான கடல் பகுதியில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளை சேகரிக்கும் என்றாா்.
யுனெஸ்கோ கடல்சாா் ஆணைய நிா்வாகச் செயலா் விதாா் ஹெல்கெசன், யுனெஸ்கோ ஐஓசி செயலகத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாச குமாா் தும்மாலா, மாசசூசெட்ஸ் டாா்ட்மவுத் பல்கலை. காமன்வெல்த் பேராசிரியா் அவிஜித் கங்கோபாத்யாய் ஆகியோா் கலந்து கொண்டு, கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தும் குறித்து பேசினா்.

