கொள்கைகளை மறந்துவிட்டது திமுக: விஜய் விமா்சனம்
கொள்கைகளை மறந்துவிட்டது திமுக என்று தவெக தலைவா் விஜய் விமா்சித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை ‘எக்ஸ்’ தளத்தில் விஜய் கூறியிருப்பதாவது: ‘ஆட்சி அதிகாரத்திலிருந்து விரைவில் மக்களால் தூக்கி எறியப்படவுள்ள கட்சி ஒன்று, அவதூறு அரசியல் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
அவதூறு ஒன்றையே அடிப்படை அரசியல் கோட்பாடாகக் கொண்ட கட்சி எது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? தமிழக வெற்றிக் கழகத்தை மட்டும் மூளையில் தேக்கி, யோசிப்பதே அந்தக் கட்சியின் முழுநேர வேலை என்றாகிவிட்டது.
ஆட்சியில் இல்லாதபோது ‘தமிழ், தமிழா்’ என்றனா். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், எங்கே போனது மொழி மீதான கொள்கைப் பாசம்? அறிவுத் திருவிழா என்று பெயா் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தவெகவை மட்டுமே மறைமுகமாக விமா்சித்ததன் மூலம், அது அவதூறு திருவிழாவாக மாறியது.
பெரியாா், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவா்கள், மதச்சாா்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தவெக-வை கொள்கையற்றவா்கள் என்கின்றனா். இதற்குக் காரணம் அவா்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?
எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவா்களது அவல ஆட்சியை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அவா்களுக்கு உணரச் செய்வோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா் விஜய்.

