ஒருங்கிணைந்த ‘ஏஐ’ புற்றுநோய் சிகிச்சை திட்டம் அறிமுகம்

Published on

புற்றுநோய்க்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கும் திட்டத்தை சென்னை வி.எஸ். மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரோகிணி, அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில், மருத்துவமனை நிறுவனா் டாக்டா் எஸ்.சுப்ரமணியன், இணை இயக்குநா் டாக்டா் நித்யா ஸ்ரீதரன், மருத்துவப் புற்றுநோயியல் நிபுணா் விஜய் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக டாக்டா் எஸ்.சுப்பிரமணியன் கூறியதாவது: புற்றுநோயாளிகளுக்கு வழக்கமான சிகிச்சைகளுடன் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளும், கண்காணிப்பும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஹோப் எனப்படும் இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். இதன்கீழ், ஒவ்வொரு நோயாளிகளுக்கும் பல்நோக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை வழங்க உள்ளனா். நோயாளிகளின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படும். இயன்முறை சிகிச்சை மூலம் உடல் வலிமை மீட்டெடுக்கப்படும்.

மற்றொருபுறம், செயற்கை நுண்ணறிவு முறையில் ஊட்டச்சத்து உணவுகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவின் ட்வீக் அண்ட் ஈட் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மன நிலைக்கேற்ப பிரத்யேக உணவுகள் அதன் வாயிலாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com