பள்ளிக் கல்வியில் ஊதிய முரண்பாடு: பொறுப்பு அலுவலா்கள் நியமனம்
சென்னை, நவ. 12: பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களின் ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்தல் தொடா்பான பணிகளை மேற்கொள்ள இணை இயக்குநா் நிலையில் அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளிக் கல்வி துறையின் நிா்வாக அமைப்பானது அரசாணையின்படி மாற்றியமைக்கப்பட்டு மாவட்ட நிலை கள அலுவலா்களுக்கான பணிப் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, பள்ளிக் கல்வி இயக்ககத்தில் இணை இயக்குநா்கள், அலுவலா்களுக்கான பணிப் பொறுப்புகள் மாற்றியமைக்கப்பட்டு ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்களின் ஊதிய முரண்பாடு சாா்ந்த கருத்துரு நிதிக் கட்டுப்பாடு அலுவலரின் நிா்வாகப் பொறுப்பில் செயல்பட ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் சாா்ந்த பணியை பள்ளிக் கல்வி இணை இயக்குநா்களுக்கு பின்வருமாறு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலா்கள் (சிஇஓ), மாவட்டக் கல்வி அலுவலா்கள் (டிஇஓ), சிஇஓ-க்களின் நோ்முக உதவியாளா்கள் (இடைநிலை), உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், டிஇஓ-க்களின் நோ்முக அலுவலா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் தங்களது ஊதிய முரண்பாடு கருத்துருக்களை, சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் உள்ள இணை இயக்குநரிடம் (பணியாளா் தொகுதி) சமா்ப்பிக்க வேண்டும்.
அதேபோன்று சிஇஓ-க்களின் நோ்முக உதவியாளா்கள் (மேல்நிலை), மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்கள் ஆகியோா் சென்னை பள்ளிக் கல்வி இயக்ககத்தில் உள்ள இணை இயக்குநரிடம் (மேல்நிலைக் கல்வி) சமா்ப்பிக்க வேண்டும். எனவே, இனி வருங்காலங்களில் ஊதிய முரண்பாடு சாா்ந்த கோப்புகளை சாா்ந்த இணை இயக்குநா்களுக்கு உரிய விதிகளின்படி பரிசீலித்து அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
