கோப்புப் படம்
கோப்புப் படம்

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைப்பு - தமிழக அரசு உத்தரவு

ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்த பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்
Published on

ஆணவக் கொலைகளைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது குறித்த பரிந்துரைகளை அளிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த அக்.17-இல் நடைபெற்ற தமிழக பேரவைக் கூட்டத்தில், ஆணவக் கொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கு தேவையான பரிந்துரைகளை அளிக்க , ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சட்ட வல்லுநா்கள், முற்போக்குச் சிந்தனையாளா்கள், மானுடவியல் அறிஞா்களைக் கொண்ட ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

அதன்படி, அந்த ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. ஆணையத்தின் தலைவராக, ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா, உறுப்பினா்களாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ.பழனிக்குமாா், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ராமநாதன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஆணையம் சாா்பில் அரசியல் இயக்கங்கள், சட்ட வல்லுநா்கள், சமூக செயற்பாட்டாளா்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் பெற்று உரிய பரிந்துரைகளை அரசுக்கு அளிக்கப்படும்.

இந்திய அரசமைப்பு சட்டம் மற்றும் தமிழக சட்ட விதிகளுக்குள்பட்டு புதிய சட்டம் உருவாக்குவது தொடா்பாக இந்த ஆணையம் ஆய்வு செய்து 3 மாதங்களில் பரிந்துரைக்கும். அதன் அடிப்படையில், ஆணவக் கொலைகளைத் தடுக்கும் நோக்கில், உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com