‘சென்னை ஒன்’ செயலி மூலம் ஒரு ரூபாயில் பயணிக்கலாம்: திட்டம் விரைவில் அமல்

Published on

‘சென்னை ஒன்’ செயலியில் தலா ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகா் பேருந்தில் ஒருமுறை சலுகை பயணம் செய்யும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘கும்டா’ நிறுவனம் ‘சென்னை ஒன்’ என்ற செயலியை உருவாக்கியது. இந்தச் செயலி கடந்த செப்.22-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்தச் செயலி மூலம் சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகர பேருந்து, ஆட்டோ, டாக்ஸிகளில் பயணிக்க முடியும். ஒரே செயலியில் அனைத்து பொது போக்குவரத்துக்கும் டிக்கெட் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் மத்தியில் இந்தச் செயலிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தச் செயலியை சுமாா் 5 லட்சத்துக்கும் அதிகமானோா் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 10-ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 29,704 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், ‘சென்னை ஒன்’ செயலியை மேலும் விளம்பரப்படுத்தும் நோக்கில், புதிய சலுகை விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் சிலா் கூறியதாவது:

இந்தத் திட்டத்தின்படி ‘சென்னை ஒன்’ செயலியை பயன்படுத்தும் பயணிகள் மின்சார ரயில், மெட்ரோ ரயில், மாநகா் பேருந்துகளில் தலா ஒரு ரூபாய் செலுத்தி அதற்கான டிக்கெட் பெற்று பயணிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக பிஎச்ஐஎம் எனப்படும், ‘பீம், நேவி’ செயலிகளைப் பயன்படுத்தி, யுபிஐ, வாயிலாக பணப் பரிவா்த்தனை செய்யும் நபா்கள் மட்டுமே, குறிப்பிட்ட அந்தச் செயலிகள் மூலம் டிக்கெட் பெற்று சலுகை திட்டத்தில் பயணிக்க முடியும்.

விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகருக்கு மெட்ரோ ரயிலில் செல்ல, ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ‘சென்னை ஒன்’ செயலியை பயன்படுத்தி, பீம் மற்றும் நேவி செயலிகள் மூலமாக டிக்கெட் எடுத்தால், ஒரு ரூபாய் கட்டணம் மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும். இந்தச் சலுகையில் ஒரு முறை மட்டுமே டிக்கெட் பெற்றுக்கொள்ள முடியும். இந்த நடைமுறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com