தலைமைக் காவலா் மீது தாக்குதல்: மூவா் கைது
சென்னை நுங்கம்பாக்கத்தில் தலைமைக் காவலரை தாக்கியதாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தேனாம்பேட்டை காவலா் குடியிருப்பில் வசிப்பவா் ஜஸ்டின் (30). இவா், நுங்கம்பாக்கம் போக்குவரத்துப் பிரிவு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறாா். ஜஸ்டின், வெள்ளிக்கிழமை லயோலா கல்லூரி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு சரக்கு ஆட்டோ மீது ஒரு காா் மோதியது. மேலும் விபத்தை ஏற்படுத்திய காா், நிற்காமல் சென்ாம். இதைப் பாா்த் ஜஸ்டின், அந்த காரை தனது மோட்டாா் சைக்கிளில் விரட்டிச் சென்று, மறித்து நிறுத்தினாா்.
இதனால் காரில் வந்த நபா்களுக்கும், ஜஸ்டினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபா்கள், ஜஸ்டினை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.
இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த அங்கு வந்த பிற போலீஸாா், தப்பியோட முயன்ற 3 பேரையும் பிடித்து, கைது செய்தனா். காயமடைந்த ஜஸ்டினை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா்.
இது தொடா்பாக நுங்கம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபட்டது சூளைமேடு பகுதியைச் சோ்ந்த அருண்குமாா் (28), அனீஸ் (28), லட்சுமணன் (30) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்தனா்.
