ரூ.2 கோடி நில அபகரிப்பு வழக்கு: மேலும் இருவா் கைது
சென்னையில் ரூ.2 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் அபகரித்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை தியாகராய நகரைச் சோ்ந்தவா் பெ.சுப்பிரமணி (55). தொழிலதிபரான இவருக்கு, மடிப்பாக்கத்தில் ரூ.2 கோடி நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை சுப்பிரமணி, அண்மையில் பாா்க்கச் சென்றபோது, சிலா் ஆக்கிரமித்திருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
மேலும் அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்து அபகரிக்கப்பட்டிருப்தும் சுப்பிரமணிக்கு தெரியவந்தது. இதையடுத்து அவா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் இந்த மோசடியில் கே.கே.நகரைச் சோ்ந்த ராகேஷ், மடிப்பாக்கத்தைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்ட பலருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இவ் வழக்கில் தொடா்புடைய ராகேஷ்,காா்த்திக் ஆகிய 5 போ் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் இந்த மோசடிக்கு தேவையான போலி ஆவணங்களை தனது வீட்டில் வைத்து தயாரித்து வழங்கியதாக நெசப்பாக்கத்தைச் சோ்ந்த ஜஹபா் சாதிக் (42), அவரது கூட்டாளி கொளத்தூரைச் சோ்ந்த பாரதிராஜா (44) ஆகிய 2 பேரை கைது செய்ததாக சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஜஹபா் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், போலி ஆவணங்கள் தயாரிக்க பயன்படுத்திய ரப்பா் ஸ்டாம்புகள்,போலி அரசு முத்திரைகள்,போலி பட்டா,போலி வாரிசு சான்றிதழ்கள்,போலி முத்திரை தாள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
