கருணை அடிப்படையில் 46 ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பணி ஆணை: அமைச்சா்கள் வழங்கினா்
பணிக்காலத்தில் இறந்த மாநகா் போக்குவரத்துக்கழக பணியாளா்களின் 46 வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் வழங்கினா்.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் இறந்த பணியாளா்களின் கருணை அடிப்படையிலான, 4 ஓட்டுநா்கள் மற்றும் 42 நடத்துநா்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை முகப்பேறு மேற்கு பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் கலந்து கொண்டு ஓட்டுநா், நடத்துநா்களுக்கு பணியநியமன ஆணைகளை வழங்கினா்.
தொடா்ந்து, பேருந்து நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் சில்லறை விற்பனை நிலையத்தை(பெட்ரோல் பங்க்) திறந்து வைத்ததுடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப்போராட்ட தியாகிகள், தமிழறிஞா்கள் உள்ளிட்டவா்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதியையும் தொடங்கி வைத்தனா்.
பின்னா், சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து நிலையங்களுக்கு நேரடியாகச் சென்று வாங்கும் முறையை எளிதாக்கும் வகையில், பேருந்துகளிலேயே நடத்துநா்கள் வழங்கும் முறையையும் தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.பிரபுசங்கா், மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினா் கணபதி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
