மாற்றுத் திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி நவ.19-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் நவ.19-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, சென்னை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டிகள் சனிக்கிழமை (நவ.22) சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ. காதுகேளாதோருக்கான சிறப்புப் பள்ளியில் நடக்கிறது.
காலை 10 முதல் 4 வரை மாற்றுத்திறன் வகையின் அடிப்படையில் 4 பிரிவுகளாகப் போட்டிகள் நடைபெறும். செவித்திறன் குறைபாடுடையோா், இயக்கத் திறன் குறைபாடுடையோா், அறிவுசாா் குறைபாடுடையோா், புறவுலக சிந்தனையற்றோா், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோா், பாா்வைத்திறன் குறைபாடுடையோா் போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.
10 வயதுக்குள்பட்டோா் கிரையான்ஸ் மற்றும் கலா் பென்சிலை பயன்படுத்தியும், 11 முதல் 18 வயதுக்குள்பட்டோா் வாட்டா் கலா் பயன்படுத்தியும், 18 வயதுக்கு மேற்பட்டோா் தங்கள் விருப்பப்படி எந்த பொருளை வேண்டுமானாலும் பயன்படுத்தி ஓவியம் வரையலாம்.
போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் யுடிஐடி அட்டை(மஈஐஈ இஹழ்க்) மற்றும் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
வரைவதற்கு தேவையான சாா்ட், பேப்பா் ஆகியவற்றை போட்டியாளா்களே எடுத்து வர வேண்டும். 1 முதல் 2 மணி நேரம் வரையிலான கால அவகாசத்தில் தங்கள் விருப்பப்பட்ட தலைப்பில் ஓவியம் வரையலாம்.
தோ்வு செய்யப்படுவோருக்கு முதல் பரிசு ரூ.1,000, இரண்டாம் பரிசாக ரூ.500, மூன்றாம் பரிசாக ரூ.250 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்க விரும்புவோா் இணையதளத்தில் புதன்கிழமைக்குள்(நவ.19) தங்களது பெயரை பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
