அம்பத்தூர் ரயில்வே சுரங்கப் பாதை பணி: விரைவுபடுத்த பொதுமக்கள் வலியுறுத்தல்!

அம்பத்தூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணி.
அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்று வரும் சுரங்கப்பாதை பணி.
Published on
Updated on
2 min read

அம்பத்தூர் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அம்பத்தூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை தினமும் சுமார் 7 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் வரதராஜபுரம், ராமாபுரம், ஆசிரியர் காலனி, காமராஜபுரம், மங்களபுரம் ஆகியவையும், வடக்கு பகுதியில் வெங்கடாபுரம்,

கே.கே. ரோடு, விஜயலட்சுமிபுரம், பிரித்திவாக்கம், மேனாம்பேடு, புதூர், பானு நகர், ஓரகடம் ஆகிய பகுதிகளும் அமைந்துள்ளன. அம்பத்தூர் ரயில் நிலையத்தில் 6 இருப்புப்பாதைகள் அமைந்துள்ளன. ரயில் நிலையத்தையொட்டி பல ஆண்டுகளாக கடவுப்பாதை (ரெயில்வே கேட்- 6 ) இருந்து வந்தது.

மேற்கண்ட வடக்கு மற்றும் தெற்கு பகுதி மக்கள் கடவுப் பாதையை கடந்து தான் ரயில் நிலையம், காய்கறி அங்காடி, அம்பத்தூர் பேருந்து நிலையம், கடை வீதிகளுக்கு சென்று வர வேண்டும். மேற்கண்ட கடவுப்பாதை வழியாக 5 நிமிடங்களுக்கு ஒருமுறை சரக்கு, விரைவு, மின்சார ரயில் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ரயில் சென்று வரும். இதனால் கடவுப்பாதை எப்போதும் மூடியே கிடக்கும். அப்போது கடவுப்பாதையை கடக்கும் போது ரயிலில் அடிபட்டு ஏராளமானோர் உயிரிழந்து வந்தனர்.

இதையடுத்து மேற்கண்ட பகுதி மக்கள் கடவுப்பாதையை அகற்றி விட்டு சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக மத்திய- மாநில அரசுகளின் அதிகாரிகள் கடவுப்பாதையை ஆய்வு செய்து சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து சுரங்கப்பாதை அமைக்க ரூ. 20.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரயில்வே பாலம் பகுதிக்கு மட்டும் ரூ.9.50 கோடியும், மாநகராட்சி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க ரூ.11.40 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த சுரங்கப்பாதை ரயில்வே பகுதியில் 17 அடி அகலமும், அதில் நடைபாதை 5 அடி அகலமும், 9.50 அடி உயரமும் கொண்டது. சுரங்கப்பாதை 17 அடியில் 5 அடி நடைபாதை போக, மீதியுள்ள 12 அடி சுரங்கப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும். மாநகராட்சி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை வடக்கு, தெற்கு புறத்தில் தலா 328 அடி நீளம் கொண்ட வகையில் அமைக்கப்படவுள்ளன.

இதன் பிறகு 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரயில்வே பகுதியில் சுரங்கப்பாதை பணி தொடங்கியது. இப்பணிக்காக 17 அடி அகலம் மற்றும் 9.5 அடி உயரம் கொண்ட கான்கிரீட் உள்பரிமாணத்துடன் 33 பெட்டிகள் தயாரிக்கப்பட்டது.

இதில் 29 பெட்டிகள் இருப்புப் பாதைகளுக்கு அடியில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பிறகு தற்போது ரயில்வே சுரங்கப்பாதையின் வடக்குப் பகுதியில் மாநகராட்சி சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மழை அடிக்கடி பெய்து வருவதால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் தெற்கு பகுதியில் இதுவரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணிகள் வரும் ஜனவரியில் தொடங்கி மார்ச் மாதம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கப்பாதை பணி நடைபெற்று வருகிறது. இதனால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், காய்கறி அங்காடி, கடைவீதிகளுக்கு பொதுமக்கள் தினமும் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். இதையடுத்து சுரங்கப்பாதையின் வடக்கு பகுதியில் பணிகளை விரைந்து முடித்துவிட்டு, தெற்கு பகுதியிலும் பணிகளை தொடங்கி விரைவுப்படுத்த வேண்டும் என்றனர்.

பொதுமக்களின் ஒரு தரப்பினர் கூறியது: இந்த சுரங்கப் பாதையில் இரு சக்கர வாகனங்கள் தவிர ஆட்டோ, கார், அவசர ஊர்திகள் செல்லமுடியாது. இதனால் பொதுமக்களின் அவசர தேவைக்கு சுரங்கப்பாதை பயன் இல்லாமல் அமையவுள்ளது.

சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையில் எதேனும் பாதிப்பு ஏற்பட்டால், இந்த சுரங்கப்பாதை மாற்றுப்பாதையாக இருக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த பாதையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் வகையில் உள்ளதால், பொதுமக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com