மும்பையிலிருந்து கூரியா் மூலம் போதை மாத்திரை கடத்தி விற்பனை! பட்டதாரி உள்பட மூவா் கைது!
மும்பையிலிருந்து கூரியா் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்றதாக பட்டதாரி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கிண்டி தொழிற்பேட்டை, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே போலீஸாா் சனிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக இரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில் இருந்த 300 போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக 3 பேரையும் கைது செய்தனா். விசாரணையில் அவா்கள், தியாகராயநகரைச் சோ்ந்த சரண் (23), சரவணன் (21), தரமணியைச் சோ்ந்த பரமேஸ்வரன் (21) என்பது தெரியவந்தது.
மூவரும், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை கூரியா் மூலம் கடத்தி சென்னை கொண்டு வந்து விற்று வந்தது தெரியவந்தது. சரண், பரமேஸ்வரன் ஆகிய 2 பேரும் கல்லூரியில் படித்து வருவதும், சரவணன் பட்டதாரி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, மேலும் விசாரணை செய்கின்றனா்.

